×

2019 ஏப்ரல் 1 முதல் 2024 பிப்ரவரி 15 வரை 22,217 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டன: உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ பிரமாண பத்திரத்தில் தகவல்

புதுடெல்லி: கடந்த 2019 ஏப்ரல் 1ம் தேதி முதல் 2024 பிப்ரவரி 15ம் தேதி வரை 22,217 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டிருப்பதாகவும், அவற்றில் 22,030 பத்திரங்கள் பணமாக்கப்பட்டிருப்பதாகவும் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறி உள்ளது. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க கடந்த 2018ல் ஒன்றிய பாஜ அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரம் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்த தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை வழங்கியவர்கள் விவரம் மற்றும் கட்சிகள் பெற்ற நிதி தொடர்பான அனைத்து விவரங்களையும் மார்ச் 6ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் வழங்க எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்டது.

ஆனால், தேர்தல் பத்திரம் விற்கப்பட்ட விவரமும், அதை பணமாக்கிய விவரமும் தனித்தனியாக பராமரிக்கப்படுவதாகவும், நன்கொடை வழங்கியவர் எந்த கட்சிக்கு தந்துள்ளார் என்கிற தகவலை இணைப்பது சவாலான பணி என்பதால் ஜூன் 30ம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டுமெனவும் எஸ்பிஐ தனியாக மனு செய்தது. இதை நிராகரித்த உச்ச நீதிமன்றம், கடும் கண்டனம் தெரிவித்ததுடன் மார்ச் 12ம் தேதி அலுவலக பணி நேரம் முடிவதற்குள் தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்களை எஸ்பிஐ தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டது. இதனை தேர்தல் ஆணையமும் உறுதி செய்தது.

இந்நிலையில், தகவல்கள் வழங்கியது தொடர்பாக எஸ்பிஐ தரப்பில் அதன் தலைவர் தினேஷ் குமார் காரா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறியிருப்பதாவது: உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, தேர்தல் பத்திரங்களின் விவரங்கள் மார்ச் 12ம் தேதி வணிக நேரம் முடிவதற்குள் தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இவை பாஸ்வேர்டு பாதுகாப்புடன் கூடிய 2 பிடிஎப் கோப்புகளாக வழங்கப்பட்டுள்ளது. ஒன்றில், தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்ட தேதி, வாங்கியவர்களின் பெயர், வாங்கிய பத்திரங்களின் மதிப்பு ஆகியவையும் மற்றொன்றில் தேர்தல் பத்திரங்கள் பணமாக்கப்படும் தேதி, நன்கொடை பெற்ற அரசியல் கட்சிகளின் பெயர்கள், பத்திரங்களின் மதிப்புகள் போன்ற விவரங்களும் இடம் பெற்றுள்ளன.

நீதிமன்ற உத்தரவுபடி, 2019 ஏப்ரல் 1ம் தேதி முதல் 2024 பிப்ரவரி 15 வரையிலான தேர்தல் பத்திரம் விவரங்கள் தரப்பட்டுள்ளன. 2019 ஏப்ரல் 1 முதல் 2019 ஏப்ரல் 11 வரை மொத்தம் 3,346 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. அவற்றில் 1,609 பத்திரங்கள் பணமாக்கப்பட்டுள்ளன. 2019 ஏப்ரல் 12 முதல் 2024 பிப்ரவரி 15 வரை மொத்தம் 18,871 பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. 20,421 பத்திரங்கள் பணமாக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 22,217 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது. அதில் 22,030 பத்திரங்கள் பணமாக்கப்பட்டிருக்கிறது. 2018ம் ஆண்டு அரசாணைப்படி, பத்திரம் வாங்கிய 15 நாட்களில் அதை பணமாக்காத பத்திரங்களின் நிதி, பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

* இணையதளத்தில் நாளை வெளியீடு
மக்களவை தேர்தலையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள முன்ஏற்பாடு நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் காஷ்மீர் சென்றுள்ளார். ஜம்முவில் நேற்று அவர் செய்தியாளர்களை சந்தித்த போது, ‘‘எஸ்பிஐ வங்கியிடம் இருந்து தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தரவுகளை தேர்தல் ஆணையம் பெற்றுள்ளது. அவர்கள் சரியான நேரத்தில் எங்களுக்கு விவரங்களை தந்துள்ளனர். நான் ஜம்முவில் ஆய்வு முடித்து சென்று தரவுகளை பார்வையிடுவேன். சரியான நேரத்தில் அது தொடர்பான அனைத்து தகவல்களையும் வெளியிடுவேன்’’ என்றார். எனவே உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, எஸ்பிஐ வழங்கிய தேர்தல் பத்திர விவரங்கள் அனைத்தும் தேர்தல் ஆணைய இணையதளத்தில் நாளை வெளியிடப்பட உள்ளது.

The post 2019 ஏப்ரல் 1 முதல் 2024 பிப்ரவரி 15 வரை 22,217 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டன: உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ பிரமாண பத்திரத்தில் தகவல் appeared first on Dinakaran.

Tags : SBI ,Supreme Court ,New Delhi ,State Bank of India ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...